பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள, 2025க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட நம் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்று உள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025க்கான பட்டியலை அந்த பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் இவர்.
இந்த பட்டியலில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், 24வது இடத்தில் உள்ளார். நாட்டின் பொருளாதாரக் கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா, 76வது இடத்தில் உள்ளார். நாட்டின் பணக்கார பெண் தொழிலதிபர்களில் ஒருவரான இவர், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் ஆவார். கர்நாடகாவைச் சேர்ந்த ‘பயோகான்’ நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, 83வது இடத்தில் உள்ளார்.