தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக் (SLYL) 2025 கிரிக்கெட் தொடரை அனுசரிக்க இலங்கை கிரிக்கெட்டுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தேசியப் பாதை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்படும் இந்தத் தொடர், இளம் வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் விளையாடவும், அடுத்த கட்டத்திற்கு உயரவும், தேசிய அணியில் இடம் பெறுவதற்கு வழிவகுக்கும் ஒரு தளத்தை வழங்குகிறது.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, தம்புள்ளை, காலி மற்றும் கண்டி போன்ற ஐந்து சூப்பர் மாகாணங்களைக் கொண்ட இந்த 50 ஓவர் தொடர், 2025 நவம்பர் 19 முதல் 28 வரை கொழும்பிலுள்ள ஐந்து மைதானங்களில் நடைபெறவுள்ளது. அரை இறுதிப் போட்டிகள் நவம்பர் 26ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 28ஆம் தேதியும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு சிங்கள விளையாட்டு கழகத்தில் (SSC) நடைபெற்றது. இதன் போது தொடரின் வெற்றிக் கிண்ணம் மற்றும் அணிகள் அறிமுகமும் இடம்பெற்றது.
இந்த ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த, இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான அஷ்லி டி சில்வா அவர்கள், “வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது, ஏனெனில் இது எதிர்கால வீரர்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது, மேலும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக் அந்தச் செயலில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது,” என்று கூறினார்.
பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக் மூலம் பல இளம் வீரர்கள் உருவாகி, தேசிய வீரர்களாக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல், பிரிமா குழுமம் இலங்கை பெருமையுடன் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்கின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராகச் செயற்பட்டு வருகிறது.
சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், பிரிமா குழுமம் இலங்கையின் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன , “பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக், நாட்டிலுள்ள அடிமட்ட கிரிக்கெட்டை வளர்ப்பதில் எங்களின் நீடித்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்தார். “கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, இளம் வீரர்களின் ஆற்றலைக் கண்டறிய அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நாங்கள் இலங்கை கிரிக்கெட்டுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். அவர்களில் பலர் முன்னேறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் பார்ப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.”
தேசிய வெள்ளைப்பந்து அணித் தலைவர் சரித் அசலங்க, “பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக் 2011-2012ஆம் ஆண்டுகளில் நான் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றேன், அது அப்போது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது, இந்த ஆண்டு பங்கேற்கும் இளம் வீரர்களுக்கும் அது அவ்வாறே இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.
இத்தொடரின் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுப் பதிப்புகளில் பங்கேற்ற கமிந்து மெண்டிஸ், இத்தொடர் தனது ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகித்ததாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஆரம்ப ஆட்டக்காரரான பாத்தும் நிஸ்ஸங்க, 2013ஆம் ஆண்டுப் பதிப்பில் விளையாடிய தனது நினைவுகளை நினைவு கூர்ந்ததோடு, இத்தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மதிப்புமிக்க தளமாகத் தொடர்ந்து சேவை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக் 2025, நாட்டிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் இளைஞர் கிரிக்கெட் நிகழ்வுகளில் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்கிறது, இது இளம் வீரர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் அங்கீகாரம் பெறவும் ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகிறது.
By C.G.Prashanthan