மூதூரில் கடந்த 2025.03.14 அன்று நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30.10.2025) திருகோணமலை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயது சிறுமி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி தன் பாட்டியையும் (அம்மம்மா) அவரது சகோதரியையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி N. M. முகமட் அப்துல்லா, சிறுமியின் கல்வி கற்கும் உரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
நீதிமன்றம் சிறுமிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது. மேலும், சிறுமியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீதிபதி பின்வரும் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
மூதூர் நன்னடத்தை அதிகாரி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை சிறுமியைப் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மூதூர் நன்னடத்தை அதிகாரி மற்றும் கிராம சேவகர் அதிகாரி ஆகிய இருவரும் சிறுமிக்கான பிணையை உறுதி செய்யும் நடவடிக்கை குறித்தும் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமி சார்பாக சட்டத்தரணி எம்.எம் தஸ்லீம் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.