ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் வட்டவளைப் பகுதியில் சுமார் 15 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது, லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் லொறி கடுமையாகச் சேதமடைந்ததுடன், அதன் ஓட்டுநர் வாகனத்தினுள்ளேயே சிக்கிக்கொண்டார். அவரை மீட்பதற்காக வட்டவளை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து சுமார் ஒன்றரை மணிநேரம் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த சமயம் லொறியில் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட ஓட்டுநர் 1990 ‘சுவசெரிய’ அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.