நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 1,340-க்கும் மேற்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டு அரசாங்கம் நேற்று (07) திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக அறிவித்து அனுஷ்டித்துள்ளது.
இமயமலையில் ஏற்பட்ட பனிப் பாறை சரிவைத் தொடர்ந்து பொங்கி வழிந்த போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 589 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,000 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.
இந்து பாரம்பரிய வழக்கப்படி, ஒருவர் மறைந்து 13 ஆம் நாளில் நடைபெறும் இறுதிச் சடங்குகளை ஒட்டி, இந்தத் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நேபாள தூதரகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் 7,500-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், 32,000-க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்திய சிறப்பு மீட்புக் குழுவினர் உட்படச் சர்வதேச மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நேபாள அரசாங்கம் இன்று(08) ‘Gen Z தியாகிகள் தினம்’ எனக் குறிப்பிட்டுப் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு (08), சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டமை மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு எதிராக நேபாள இளைஞர்கள் (Gen Z) நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 72 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அன்றைய நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி இராஜினாமா செய்ய நேரிட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்தலில் இளைஞர்களின் ஆதரவு பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும் வெற்றி பெற்று, பாலேந்திர ஷா நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.