காரைக்குடி,
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், நேற்று தேர்தல் வாக்குப்பதிவை நேரில் ஆய்வு செய்தார். அப்போது காரைக்குடி கம்பன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குச் சென்றபோது, அங்கு வந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு, சீமானைக் கட்டித்தழுவி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், போக்குவரத்துத் திட்டமிடல் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: “ஜனநாயகத் திருவிழா என்று கொண்டாடும் இந்தத் தேர்தலுக்கு, மக்கள் வந்து செல்லப் போதுமான பேருந்து வசதிகளை அரசு செய்து தரவில்லை. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் அரசு, தேர்தலுக்கு ஏன் அதைச் செய்யவில்லை?
100 சதவீத வாக்குப்பதிவு வேண்டும் என்று சொல்லிவிட்டு, மக்கள் ஊருக்குச் செல்ல பேருந்து வசதி செய்து தராதது மிகப்பெரிய தவறு. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாக்களிக்காமல் இருப்பது ஒருவகையில் தேசத் துரோகம் தான். மக்கள் தங்களுக்குத் தேவையான திட்டங்களைக் கேட்கும் அதே வேளையில், தங்களது பொறுப்புணர்வோடு வாக்களிப்பதையும் செய்ய வேண்டும். நடிகர்களைப் பார்க்க வரும் கூட்டம் என்பது ஈர்ப்பினால் வருவது, ஆனால் மக்கள் தங்களது உரிமையை உணர்ந்து திரளாக வருவது ஆரோக்கியமான மாற்றம்” எனத் தெரிவித்தார்.
#Seeman #NTK #Karaikudi #TNElection2026 #BusShortage #TransportIssue #TamilPolitics #SeemanSpeech #TVKCandidate #VijayPolitics #Democracy #VoteForChange #April23 #TamilNaduPolls #ElectionCommission #PublicTransport #BreakingNews #NaamTamilar #VotePercentage #ElectionUpdate