மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் நாட்டின் பல பகுதிகளை வான்வழி தாக்குதல்களால் குறிவைத்தன. இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், முழு மேற்காசியா பகுதியிலும் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கான எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் செல்லும் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் அத்தியாவசிய பயன்பாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு எண்ணெய் கப்பல் பெர்சிய வளைகுடா பகுதியில் ஈரானின் டிரோன்கள் மூலம் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் கப்பல் தீப்பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்திற்குப் பின்னர் அந்தப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனுடன், ஹோர்மூஸ் நீரிணை அருகே பல்வேறு நாடுகளின் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
தாக்குதலில் தாய்லாந்து நாட்டின் மயூரீ நாரீ கப்பல், மார்ஷல் தீவுகளுக்கான ஸ்டார் குவைனெத் கப்பல், ஜப்பானின் சரக்கு கப்பலான ஒன் மெஜஸ்டி, மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற விஷ்ணு கப்பல், மோல்டா கொடியுடன் சென்ற ஜெபைரோஸ் கப்பல் ஆகியன தாக்கப்பட்டுள்ளன.
இதில் ஜப்பானின் சரக்கு கப்பல் ஹார்மூஸ் நீரிணையிலிருந்து சுமார் 52 கடல் மைல்கள் தொலைவில் கடலில் நங்கூரம் போட்டிருந்தபோது தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களின் மூலம் மொத்தம் 6 கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் இரு கப்பல்கள் ஈராக் நாட்டில் இருந்து எரிபொருள் ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணை பகுதி முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் இந்த பதற்ற நிலை உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும், சர்வதேச வர்த்தகத்தையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.