ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய ஹொங்கொங் சைனா கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டி சம்பியனானது.
அப் போட்டியில் பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.
ஜிஷான் அலாம் 51 ஓட்டங்களையும் அபு ஹைதர் 28 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நஸ்ருல்லா ரானா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் சைனா 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
அய்ஸாஸ் கான் 15 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது போட்டி விதிகள் பிரகாரம் 4ஆவது ஓவரில் ஓய்வுபெற்றார். (73 – 2 விக்.)
ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அபு ஹதர் ஒரு ஓட்டத்துடன் சுயமாக ஆட்டம் இழப்பதாக அறிவித்தார். அப்போது ஹொங்கொங் சைனாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த அய்ஸாஸ் கானுக்கு போட்டி விதிகள் பிரகாரம் மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைத்தது.
கடைசி ஓவரை எதிர்கொண்ட அவர், 5 சிக்ஸ்களை விளாசி ஹொங்கொங் அணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். அந்த ஓவரில் 2 வைட்கள் பதிவாகியதுடன் ஒரு பந்து டொட் போல் ஆனது.
அய்ஸாஸ் கான் 21 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 11 சிக்ஸ்கள் உட்பட 85 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நிஸாகத் கான் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அபு ஹைதர் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: அய்ஸாஸ் கான்