ஹாமில்டனில் உள்ள ‘லிங்கன் அலெக்சாண்டர் பார்க்வே’யில் புதன்கிழமை மாலை மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தது குறித்து ஹாமில்டன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து மாலை 7 மணிக்கு சற்று முன்னர் ‘அப்பர் ஜேம்ஸ்’ வீதிக்கு (Upper James Street) அருகில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி பயணித்த நீல நிற ஹோண்டா சிவிக் (Honda Civic) ரக கார் ஒன்று, சிறிய டிரெய்லர் (trailer) ஒன்றை இழுத்துச் சென்ற சிவப்பு நிற பியூக் அல்லூர் (Buick Allure) ரக வாகனத்துடன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்ததுடன், ஹோண்டா சிவிக் கார் வீதியின் நடுப்பகுதியைக் கடந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாதைகளுக்குள் நுழைந்து, எதிரே வந்த ஒரு டிராக்டர்-டிரெய்லர் (tractor-trailer) வாகனத்துடன் மோதியுள்ளது.
சிவிக் காரை ஓட்டி வந்த 24 வயதுடைய பெண் ஓட்டுநர் (அவர் காரில் தனியாகவே இருந்தார்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பியூக் வாகனத்தில் இருந்தவர்களுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஹாமில்டன் பொலிஸாரின் விபத்து மறுசீரமைப்புப் பிரிவினர் (Collision Reconstruction Unit) இந்த விசாரணையை முன்னெடுத்து வருவதுடன், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.