சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோம் மத்திய பகுதியிலுள்ள ஒஸ்டர்மாம் (Östermalm) பகுதியில் அமைந்திருக்கும் வால்ஹல்லா வேகன் (Valhallavägen) வீதியில் இன்று (14) இரு அடுக்கு (Double-decker) பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேருந்து தரிப்பிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை பொலிஸார் “தீவிரமான சம்பவம்” என்று விவரித்துள்ளனர். விபத்தின் போது பேருந்து சேவையில் இருக்கவில்லை என்றும், பயணிகள் எவரும் பேருந்தில் இருக்கவில்லை என்றும் அவசர சேவைகள் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பொலிஸார், இச்சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்த மாலை 5 மணி வரை, விபத்து நடந்த இடம் மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
“பெரிய சத்தம் கேட்டதாகவும், பலரும் கத்துவதையும் கேட்டேன்” என அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் விபத்து குறித்து விவரித்துள்ளர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பொலிஸார் தற்போது வெளியிடவில்லை.