நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துஹெர – வதாகட வீதியில் அஹகொட பாலத்திற்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொத்துஹெர நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஓட்டுநரும் பலத்த காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹபிட்டிய, பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மக்கனிகொட சந்திக்கு அருகில் கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வெவெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு –குருணாகல் வீதியில் கஹவத்த – எல சந்திக்கு அருகில், கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, வீதியை கடக்கும் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பாதசாரி பலத்த காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொரியின் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்ய பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.