ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயலாளர் துமிந்த திசாநாயக்க அவர்கள், இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் கட்சி மாநாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டார்.
மனவருத்தங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் அரவணைக்கும் நோக்குடன், டிசம்பர் 6ஆம் திகதி அனுராதபுரத்தில் கட்சி மாநாட்டை நடத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது.
துமிந்த திசாநாயக்க இது குறித்துக் கூறுகையில், “எங்களுக்குள் இருக்கும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளையும் மனக்கசப்புகளையும் மறந்து, மனவருத்தத்துடன் இருக்கும் அனைவரும் சமாதான இல்லத்திற்கு வருமாறு மீண்டும் ஒருமுறை அழைக்கின்றோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான தலைமையில் ‘பொய் போதும்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
‘இளவரசர்களை’ உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவில்லை
அரசியல் வாரிசுகள் உருவாக்கப்படுவதை நிராகரிக்கும் தொனியில் பேசிய துமிந்த திசாநாயக்க, “துமிந்த திசாநாயக்க ‘இளவரசர்களை’ உருவாக்க மாட்டார்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், “சக்திவாய்ந்தவர்கள் வராதபோது பழைய முகங்கள் என்று பேசுவார்கள். அதனால், தலைவர்களுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கமும் மக்களின் மனமாற்றமும்
சமீபத்தில் கூட்டு எதிர்கட்சிகள் நடத்திய கூட்டத்தில், ஏமாற்றமடைந்த மக்களே அதிகளவில் கலந்துகொண்டதாக திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், “எங்கள் ஆட்சியின் கீழ் வேலைவாய்ப்பு, கிராமத்திற்கு தண்ணீர், பாடசாலை, வீதி, மின்சாரம் போன்ற வசதிகளைப் பெற்ற மக்கள் தற்போது வேறு விதமாகத் தீர்மானம் எடுப்பதைப் பற்றி எங்களுக்குக் கோபமும் இல்லை, சந்தேகமும் இல்லை. பொதுவாக இந்த நாட்டு மக்கள் அவ்வாறு மாறுகிறார்கள்.
அதிகாரத்தைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்கிய இந்த அரசாங்கத்திற்கு, அவற்றை நிறைவேற்ற எந்த அவசியமும் இல்லை. இந்த அரசாங்கம் பொய்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது.”
டில்வின் சில்வாவுக்குப் பதில்
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) செயலாளர் டில்வின் சில்வா பற்றிய கருத்துக்குப் பதிலளித்த துமிந்த திசாநாயக்க, “டில்வின் சில்வாவுக்கு நாங்கள் எதிரிகளாக இருக்கலாம், ஆனால் டில்வின் சில்வா எங்களுக்கு எதிரி அல்ல. வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட கட்சிகள் இருக்கலாம், ஆனால் கட்சிகள் ஒருபோதும் எதிரிகளாக இருக்க முடியாது. நீங்கள் (டில்வின் சில்வா) எவ்வளவுதான் எதிரிகளை மன்னிக்க மாட்டேன் என்று சொன்னாலும், டில்வின் சகோதரர் இன்றும் எனக்கு சகோதரர்தான்,” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், “நாங்கள் யாருடைய காலையும் வார மாட்டோம். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அண்மையில் டில்வின் சில்வாவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு தமிழ் டயஸ்போராக்களின் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதுவும் ஒரு நாடகமா என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் இங்கு தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை என்பிபி அரசாங்கம் நிறைவேற்ற வில்லை என்று தான் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அப்படியானால் தமிழ் டயஸ்போராக்களின் ஆதரவிற்காக பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டனவா? அல்லது தமிழர்களை இவர்கள் ஏமாற்றுகின்றனரா? கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொது தேர்தலிலும், தமிழர்களின் கணிசமான வாக்கு இந்த அரசாங்கத்திற்கு கிடைத்திருந்தாலும், பின்னர் வந்த உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கான ஆதரவு மிகக் குறைவானதாகவே காணப்பட்டது. இதிலிருந்து தமிழர்கள் தமது நிலைப்பாட்டை எவ்வாறு உணர்ந்துள்ளனர் என்பதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே, டில்வின் சில்வாவுக்கெதிரான இந்த லண்டன் ஆர்ப்பாட்டமானது ஒரு கண் துடைப்பா? அல்லது நாடகமா? என என் பி பி அரசை கேட்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.
By C.G.Prashanthan