சென்னை:
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை விமர்சிக்காமல் சிலருக்கு உணவே இறங்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆதரவான பேட்டி:
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில், வைகோவின் அரசியல் பயணத்தைக் குறிக்கும் ‘கடந்து வந்த 34 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர், “தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகள் நடைபெறுவதாகப் பலரும் கூறி வருகிறார்கள். விஜய் ஆட்சியை விமர்சிக்காமல் சிலருக்கு உணவே இறங்காது. இந்த ஆட்சியை ‘சர்க்கஸ் கூடார ஆட்சி’, ‘கோமாளி ஆட்சி’ என முன்னாள் துணை முதலமைச்சர் விமர்சித்து வருகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே விஜய் ஆட்சியை விமர்சிக்காத கட்சிகளாக உள்ளன,” என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் ஊழல்:
தொடர்ந்து அவர், “கடந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் மலை முழுங்கி மகாதேவன் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஊழலும் படிப்படியாக வெளிவரும். பெரியார் அறிவுலகம் நூலகத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் 2,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், பொடா சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன். 1991-ஆம் ஆண்டு முதல் பல்வேறு முதலமைச்சர்களின் ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொகுத்துள்ளேன். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ச அழைக்கப்பட்டதைக் கண்டித்தே கூட்டணியை முறித்துக் கொண்டேன். அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறப்பட்ட போதும் நான் அதனை ஏற்கவில்லை,” என்று கூறினார்.
ஸ்டெர்லைட் விவகாரம்:
மேலும் அவர் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலை நிர்வாகத்தின் ஆதரவாளராகச் செயல்பட்டார். நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் ‘கிரீன் காப்பர்’ என்ற பெயரில் தொடங்குவதற்கு அனில் அகர்வால் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து, ஆலை மீண்டும் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினேன். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டனர்,” என்று எடப்பாடி பழனிசாமி அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
காவல்துறை மீது விமர்சனம்:
இறுதியாக, “ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை எந்தத் துப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து இருக்க வேண்டாமா?” என்று அவர் காவல் துறையின் செயல்பாடுகளையும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். தவெக அரசிற்கு ஆதரவாகவும், முந்தைய ஆட்சிகளைக் கடுமையாக விமர்சித்தும் வைகோ அளித்துள்ள இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.