ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28, 2026) அதிகாலையில் ஸ்கார்பரோவில் (Scarborough) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் எக்லிண்டன் அவென்யூ ஈஸ்ட் (Victoria Park Avenue and Eglinton Avenue East) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, டொராண்டோ காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
CP24 செய்தி நிறுவனத்திற்கு அதிகாரிகள் அனுப்பிய மின்னஞ்சலில், அவசரக்கால மீட்புக்குழுவினர் தீயை அணைத்ததாகவும், குடியிருப்பின் உள்ளே ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் மற்றொருவர் புகை மூட்டத்தினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போதைய நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சிறிய அளவிலானவை என்றே நம்பப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் எந்த விபரமும் வழங்கவில்லை. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.