வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு புகையிரத வீதியின் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பகுதியில் உள்ள புகையிரதக் கடவைகள் பயன்படுத்தப்பட முடியாத வகையில் இருப்பது தொடர்பிலும், வவுனியா புளியங்குளம் பிரதேசங்களில் புகையிரத கடவைகள் கடுமையாக சேதமடைந்துள்ளமை தொடர்பிலும் மற்றும் அவற்றினூடாக பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புகையிரத கடவைகளே சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த கடவைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பான புகையிரத பாதைகள் பொருத்தமான நிலைமையில் இருக்கின்றன.
வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கடவைகள் மட்டுமே பொலிஸாரால் பராமரிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத புகையிரதக் கடவைகளை அகற்ற வேண்டியுள்ளதால் அவை புகையிரத திணைக்களத்தால் பராமரிக்கப்படுவதில்லை. அவை பிரதேச மக்களால் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் பொறுப்பேற்க முடியாது.
இதேவேளை மஹவ – ஓமந்தை புகையிரத பாதை வேலைத்திட்டத்தின் கீழ் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தாலும் பாதுகாப்பற்ற வகையிலான கடவைகளால் அந்த வேகத்தில் பயணிக்க முடியாமையினால் அந்த கடவைகளை அகற்ற வேண்டியுள்ளது.
ஆனால், மக்களின் போக்குவரத்துக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதன்படி புகையிரதப் பாதையில் இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான கடவை வரையில் சமாந்திரமான வீதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று கடவைகளில் மேம்பாலத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.