2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில், அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் இந்த வருடம் டிசம்பர் 31வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
ஹெக்டர் அப்புஹாமியின் தலைமையில் பாராளுமன்றத்தில் இந்த குழு கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் டிசம்பர் 31வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளை அந்தந்த அமைச்சுகள் செலவிடுதல் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அனைத்து விடயங்களையும் குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இதன்போது தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தனது குழுவின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்தந்த அமைச்சுக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அவற்றைச் செலவு செய்ததன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் குழுவிற்கு அறிக்கைகளை வழங்குமாறு இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.