இலங்கையில் பாலியல் மற்றும் பால்நிலையினை அடிப்படையாகக் கொண்ட வன்முறையினால் (SGBV) பாதிக்கப்பட்டு பிழைத்திருப்போருக்கான நீதியை உறுதி செய்தல் எனும் திட்டத்தின் 15 மாதப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவை கொண்டாடும் வகையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நவம்பர் 04 ஆம் திகதி நடைபெற்ற அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பீனிக்ஸ் பறவை போல எழுதல் – நமது தேசத்தை உயர்த்துதல்” என்ற தலைப்பிலான இந்த திட்டமானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கனடா அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவிக்கையில்,
இம் முனைப்பானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறையிலிருந்து மீண்டு வந்த பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதையும், அவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடுப்பதையும், அவர்கள் கண்ணியம், தாங்குதிறன்(resilience) மற்றும் தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இன்று, நான் ஒரு தொழில்முனைவோராக இருக்கிறேன். இன்று, நான் ஒரு வர்த்தகப் பெண்மணி. இன்று, என்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக இருக்கிறேன்.” எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், கனடாவின் உயர் ஸ்தானிகராலயத்தின் கூட்டுறவிற்கான தலைவர் (Head of cooperation) திரு. கிரில் லோர்டானோவ் (Mr. Kiril Iordanov), இலங்கையின் UNDP வதிவிடப் பிரதிநிதி திருமதி. அஸுஸா குபோடா (Ms. Azusa Kubota), மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி. தரங்கனி விக்கிரமசிங்க (Ms. Tharangani Wickramasinghe), அமைச்சின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. நில்மினி ஹேரத் (Ms. Nilmini Herath) ஆகியோருடன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் காப்பகங்களின் தலைவர்கள் மற்றும் தங்கள் வலியை நோக்கங்களாக மாற்றிய பல துணிச்சலான பாதிக்கப்பட்டு மீண்டுவந்த பெண்களும் கலந்துகொண்டனர்.