உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வளைகுடாவில் இரண்டு நாடுகளுக்கு இடையில் மிகப்பெரிய புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டம் இந்தியாவிற்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் புல்லட் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கு முன்மாதிரியாக ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் திகழ்கின்றன. இந்தியாவிலும் முதல் புல்லட் ரயில் சேவையை மும்பை – அகமதாபாத் இடையில் 2029 டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சூரத் – வாபி இடையே ஆகஸ்ட் 2027ல் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து கத்தார் நாட்டின் தோஹா வரை அதிவிரைவு புல்லட் ரயில் சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதாவது, இரண்டு நாடுகளுக்கு இடையிலான புல்லட் ரயில் சேவை என்பது கவனிக்கத்தக்கது. இதற்காக 11.5 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளனர். இது இந்திய மதிப்பில் 1.04 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தூரம் என்பது 785 கிலோமீட்டர். மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது. சுமார் 800 கிலோமீட்டர் என வைத்துக் கொண்டால் புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் வெறும் 2 மணி நேரத்தில் பயணிக்கலாம்.
இந்த திட்டத்தை அடுத்த 6 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஒரு கோடி பயணிகள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பாக இரண்டு நாடுகளின் விமான நிலையங்களையும் இணைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.