நீர் மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப்படும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும், அணுசக்தியில் இயங்கும், ‘போஸைடான்’ என்ற ஏவுகணை சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கு இடையே கடந்த மூன்றரை ஆண்டு களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதற்காக ரஷ்யாவுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. வலியுறுத்தல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுடன் போரை நிறுத்துவது குறித்து நேரடியாக பேச்சு நடத்தினார்.
இருப்பினும் போர் நிறுத்தத்துக்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதுாரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருகிறார்.
இதையடுத்து எழுந்துள்ள பதற்றத்துக்கு மத்தியில், ரஷ்யா தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்களை சோதனை செய்து தன் பலத்தை காட்டி வருகிறது-.
ரஷ்யா தன்னிடம் உள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும், அணுசக்தியில் இயங்கும் ‘போஸைடான் சூப்பர் டார்பிடோ’ ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று தெரிவித்து உள்ளார்.