ரஜினி படத்தை இயக்கவுள்ளீர்களா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார்.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் இயக்குநர் மாரி செல்வராஜும் இருந்தார். ஆனால், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே பத்திரிகையாளர் சந்திப்பின் போது ரஜினியுடனான சந்திப்பு, ரஜினி படம் இயக்கம் குறித்து மாரி செல்வராஜிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு மாரி செல்வராஜ், “நிறைய முறை ரஜினி சாரை சந்தித்திருக்கிறேன். என்னுடைய கதைகள், படங்கள் பற்றி பேசியிருக்கிறோம். எனது அனைத்து படங்களுக்குமே நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். வாழை படத்துக்கு ஒரு பெரிய கடிதமே அனுப்பினார். அவரை மாதிரி ஒரு நாயகன் கிடைத்தால் நான் எப்படி பணிபுரிவேன் என்ற சந்தேகம் இருக்கலாம். அதற்கான பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கின்றன.
என்னவாக இருந்தாலும், அதை ரஜினி சார் தான் தீர்மானிக்க வேண்டும். நானும் அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இருக்கிறேன். என்னிடம் கதைகள் உள்ளன. அக்கதையில் ரஜினி சாரும் நடிக்கலாம், துருவ்வும் நடிக்கலாம். ரஜினி சார் நடிக்க தீர்மானித்தால் அதனை பெரிதாக எழுத வேண்டும். அவ்வளவு தான். என்னையும், கதையும் நம்பி வந்தால் எந்தவொரு நாயகருடனும் பணிபுரிய தயாராகவே இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பைசன்: காளமாடன்’ வெளியாகியுள்ளது. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வந்தாலும், வசூல் ரீதியாக படக்குழுவினர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
HinduTmail