அம்பகஹவெல சந்தி பகுதியில் ‘அம்ப போ’ (Amba Bo) என்று கிராம மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட யானை மீது தீப்பந்தங்களை வீசி, அது உயிரிழக்கக் காரணமான மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம், சீப்புக்குளம் பகுதியில் உள்ள அம்பகஹவெல சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் முற்றத்தில், கடந்த திங்கட்கிழமை காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ‘அம்ப போ’ என்ற யானை பலத்த தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 14ஆம் திகதி இரவு, கிராம மக்கள் சிலர் தீப்பந்தங்களைப் பயன்படுத்தி இந்த யானையைத் துரத்த முயற்சித்துள்ளனர். இதன்போது அங்கிருந்த ஒரு நபர் யானையின் உடலில் நேரடியாகத் தீ வைத்துள்ளதாகவும், இதனால் யானைக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த யானைக்கு அனுராதபுரம் பண்டுலகம பிரிவின் வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்தது.
இது குறித்து வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த யானை கடந்த மூன்று மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அதற்குத் தங்களால் அவ்வப்போது சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டனர். வழக்கமாக அந்தப் பகுதியில் உலாவரும் இந்த யானையை கிராம மக்கள் பொதுவாகப் பாதுகாப்பாகவே கவனித்து வந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை வனவிலங்கு அதிகாரிகளால் யானையின் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து யானைக்கு மத வழிபாடுகளைச் செய்து அஞ்சலி செலுத்தினர்.
யானையைத் தீயிட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களிடமும் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
By C.G.Prashanthan