மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் திடீரென இடிந்து வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறுவர்களுக்கு அடங்குவதாகவும், இடிந்து விழுந்த இந்த இரண்டு கட்டிடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஃபெஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பெஸ் நகரம் பல நூறாண்டுகள் பழமையான கட்டிடங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் பல கட்டிடங்களின் அடித்தளங்கள் வலுவிழந்திருக்கலாம் என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, மரகேஷ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 12,000இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
இதேவேளை, ஃபெஸ் பழைய நகரப் பகுதியில் கடந்த ஆண்டு பெப்ரவரியில் வீடொன்று இடிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.