வன்கூவரில் இரண்டு குழந்தைகளின் தாயை குத்திக்கொன்ற 35 வயதான மொன்ரியல் நபர், பிளாட்டோ மொன்ரோயல் பகுதியில் உள்ள ஒரு dépanneur (சிற்றங்காடி) கடையில் நடந்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டு முதல் நிலை கொலை குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சேவியர் ஜெலாட்லி (Xavier Gellatly) க்யூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய இரு மாகாணங்களிலும் நீண்ட குற்றப் பின்னணியை கொண்டவர். அவரது பதிவுகளில் பல வன்முறை குற்றங்களுக்கான தண்டனைகளும் உள்ளன. மேலும், அவர் மீண்டும் கொலை செய்யக்கூடும் என முன்பு பரோல் வாரியம் தெரிவித்த தீர்ப்பும் உள்ளது வெளியாகியுள்ளன. வெள்ளிக்கிழமை மொன்ரியால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பெர்ரி தெருவில், லோரியர் மெட்ரோ நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ள மூலையிலுள்ள கடையின் உரிமையாளர் சோங் வூ கிம் (Chong Woo Kim) கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு அவர்மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. க்யூபெக்கில் இவ்வகை சிற்றங்காடிகள் பொதுவாக வசதியான கடை (dépanneur)என்று அழைக்கப்படுகின்றன.
இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு, சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியபோது பொது போக்குவரத்தை பயன்படுத்தியிருக்கலாம் எனக்கருதிய காவல்துறையினர் நகரின் மெட்ரோ வலையமைப்பில் உள்ள பல நிலையங்களில் பெரும் அளவில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2012ஆம் ஆண்டு, வான்கூவரில் உள்ள கோபால்ட் ஹோட்டலில் (Cobalt Hotel) 28 வயதான, இரண்டு குழந்தைகளின் தாயான செல்சி ஹோல்டனை (Chelsea Holden) அவர் குத்திக்கொன்றார். அதே சம்பவத்தில் மற்றொரு நபரையும் ஏழு முறை குத்தினார்.
இந்த வழக்கில் அவர் மனிதக்கொலை (manslaughter) மற்றும் கடுமையான தாக்குதல் (aggravated assault) குற்றங்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.