கிராமத்து நாயகன் சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ எச காத்தா..’ எனும் முதல் பாடலும் பாடலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜெ. அச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், கோபி நயினார், ஜெயபிரகாஷ், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான எளிய மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘எச காத்தா நெஞ்சில நீ நீ ..’ என தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் யுக பாரதி எழுத பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சின்மயி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் தோல் பாவை கூத்து கலை தொடர்பான காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் மெல்லிசையாகவும் பாடல் அமையப்பெற்றிருப்பதால்.. இசை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல்களின் பட்டியலில் ‘எச காத்தா..’ இடம் பிடித்திருக்கிறது.