முல்லைத்தீவு, கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை வெளியேற்றி, அந்த இடத்துக்கு பிரிதொரு உறுப்பினரை நியமிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்குத் தடை உத்தரவு வழங்கக் கோரி அச்சபையின் முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று (19.02.2026) தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர் வழக்கு விசாரணை முடியும் வரை தமது இடத்துக்குப் பிரிதொரு உறுப்பினரைத் தமிழரசுக் கட்சி நியமிப்பதற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பெற்றிருந்தார்.
ஆயினும், இன்று இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர் மனுதாரரான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையாகி வாதிட்டார்.
அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சின்னையா யோகேஸ்வரனின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே கரைத்துரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட சின்னராசா யோகேஸ்வரனின் இடத்துக்குப் பிரிதொருவரை உறுப்பினராகத் தமிழரசுக் கட்சி நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.