சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று(11) வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலின்படி சிம்பாப்வே அணித்தலைவர் சிக்கந்தர் ராசா மீண்டும் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் ஓமானுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில், 4 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், அதிரடியாக விளையாடி வெற்றி ஓட்டங்களையும் பெற்றார்.
இந்த சிறப்பான ஆட்டமே அவரை மீண்டும் முதலிடத்திற்கு ஏற்றியுள்ளது.
மேலும் துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசையில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா 909 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
அத்துடன் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பில் சால்ட் 821 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 769 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 6 இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.
பாகிஸ்தானின் அப்ரார் அகமதுவுடன் அவர் கடும் போட்டியில் உள்ளார். மேலும் இலங்கையின் வனிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.