சென்னை
சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வாக்களிக்காத மக்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடுத்த சாபம் தற்போது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தண்ணீர் வர வாய்க்கால் வெட்டுகிறோம்”:
சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். “1996-ல் இருந்து 2001 வரை இவ்வளவு சாதனைகள் செய்தும் தோற்றுவிட்டோமே என்று கலைஞரிடம் கேட்டபோது, ‘அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இப்போதுதான் வாய்க்கால் வெட்டிக்கொண்டு இருக்கிறோம்; 5 ஆண்டு கழித்துத் தண்ணீர் நாம் வெட்டும் பாதையில் தானாக வரும்’ என்று அவர் உற்சாகமாகச் சொன்னார். அதையேதான் இன்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன்,” என்றார்.
“விசிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு கஞ்சா அடிக்கிறார்கள்”:
தொடர்ந்து பேசிய அவர், “வீட்டு வரி உயர்ந்துவிட்டது என்று பேசுகிறீர்கள், அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை? வாயை மூடிவிட்டுச் சும்மா இருங்கள். நாம் கட்டிக் கொடுத்த ஏசி பஸ் ஸ்டாப்பில் எல்லாம் விசிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, கஞ்சா அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இனிமேலாவது கட்சியின் வரலாறு என்ன? எல்லாரும் சமமாக உட்கார்ந்திருக்கக் காரணம் யார்? என்பதை ஊருக்குச் சொல்லிக்கொடுங்கள்,” என்று ஆவேசமாகப் பேசினார்.
“நல்ல சாவே வராது” – வாக்காளர்களுக்குச் சாபம்:
“சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் ஓட்டுப் போட்டிருந்தால் கூட நாம் வெற்றி பெற்றிருப்போம். உயிர் காப்பது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேர் உயிரை அவர் காப்பாற்றியிருப்பார். ஆனால், அவருக்கு வாக்களிக்காத அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் போல யாரும் இவ்வளவு வேலை செய்யவில்லை,” என்று கடுமையாகச் சாபமிட்டார்.
“இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்”:
இறுதியாகக் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆர்.எஸ்.பாரதி, “இனிமேல் பொது மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி நம்ம கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள், அது போதும். இனி ஒரு 5 ஆண்டுகளுக்கு நாம் அமைதியாக ஓய்வு எடுப்போம்,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
#RSBharathi #MaSubramanian #Saidapet #DMK #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates