ஜனாதிபதிக்கு இதுவரையில் முக்கிய விடயங்களை குறிப்பிட்டு 3 கடிதங்கள் அனுப்பியும் எந்தவொரு கடிதத்திற்கும் இதுவரையில் ஜனாதிபதியிடம் பதில் கிடைக்கவில்லை, தமிழ் மக்களுக்காக போராடிய மாவீர்களின் துயிலும் இல்லங்களில் அவர்களின் சமாதிகளுக்கு மேல் சப்பாத்துகால்களுடன் இராணுவம் விளையாடுவதும், அதில் நடந்து திரிந்து அந்த இடங்களை உதாசீனப்படுத்தவதும் இந்த நாட்டில் உங்களுக்கும் எங்களுக்குமான நல்லிணக்க இடைவெளியை அதிகரிக்குமே தவிர அது ஒற்றுமையை ஏற்படுத்தாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவீன தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நான் ஜனாதிபதிக்கு கடிதங்கள் சிலவற்றை அனுப்பியுள்ளேன். தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிப்பு தொடர்பிலும் கிளிநொச்சி மகாவித்தியாலய காணி விடுவிப்பு தொடர்பிலும் வடக்கு, கிழக்கில் சிவில் செயற்பாடுகளில் இராணுவத் தலையீட்டை நிறுத்துமாறும் கோரி கடிதங்களை அனுப்பியிரந்தேன். ஆனால் அவற்றுக்கு இன்று வரை ஜனாதிபதியினால் பதிலளிக்கப்படவில்லை.
இந்த நாட்டில் நாங்கள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்திக்கின்றோம். கடந்த நவம்பர் 6ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்போது தேராவில் துயிலும் இல்லம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம்.
அங்கு கட்டிடங்களையும் இராணுவத்தினர் கட்டுகின்றனர். ஆனால் இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில், வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டு சமாதானம் ஏற்பட வேண்டும். புதிய அரசாங்கம் வந்துள்ளது. நீங்கள் ஒரு வருடத்தை கடந்துள்ளீர்கள். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்காக போராடிய மாவீர்களின் துயிலும் இல்லங்களில் அவர்களின் சமாதிகளுக்கு மேல் சப்பாத்துகால்களுடன் இராணுவம் விளையாடுவதும், அதில் நடந்து திரிந்து அந்த இடங்களை உதாசீனப்படுத்தவதும் இந்த நாட்டில் உங்களுக்கும் எங்களுக்குமான நல்லிணக்க இடைவெளியை அதிகரிக்குமே தவிர அது ஒற்றுமையை ஏற்படுத்தாது.
நீங்கள் இந்த நாட்டில் வதைபட்டு கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களை கடந்த 13ஆம் திகதி நினைவு கூர்ந்தீர்கள். இந்த நாட்டின் ஜனாதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் வைத்து நினைவு கூர்ந்தீர்கள். இதனால் உங்களுக்குள்ள அதே வலிகள், உணர்வுகள் எங்களுக்கும் உள்ளது. இதனை புரிந்துகொள்ளுங்கள். துயிலும் இல்லங்கள் ஆத்மாக்கள் உறங்கும் இடம். தமிழர்களின் மிகப்பெரிய ஆசைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய இடம்.
நீங்களும் போராட்ட இயக்கங்களில் இருந்து நாட்டின் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளீர்கள். இந்த அரசாங்கத்தை நாங்கள் கைப்பற்ற மாட்டோம். அதற்கான தேவையும் இல்லை. உங்களின் சட்டத்தின்படி அதனை செய்யயும் எங்களால் முடியாது. ஆனால் நாங்கள் இந்த நாட்டின் தேசிய இனமே. இதனால் பாரம்பரியமாக தோன்றி வளர்ந்த இனங்களே நாங்கள். இதனால் அந்த மக்களின் உரிமைகள் மற்றும் எண்ணங்களை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். காலமும் வரலாறும் உங்களுக்கு நல்ல செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் மாவீரர் நாளில் துயிலும் இல்லங்களை விடுவித்தால் அந்த மக்களின் மனங்களில் நீங்கள் மாற்றங்களை கொண்டுவந்தவர்களாக இருப்பீர்கள் என்றார்.