நடிகர் லியோ. சிவக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மாண்புமிகு பறை’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டார்.
இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாண்புமிகு பறை: எனும் திரைப்படத்தில் லியோ சிவக்குமார் , காயத்ரி ரெமா, கஜ ராஜ், சேரன் ராஜ், ரமா ,அசோக் ராஜா, ‘காதல்’ சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ் ,நந்தகுமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரா. கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘தேனிசை தென்றல்’ தேவா இசையமைத்திருக்கிறார்.
பறை இசை கலைஞர்களின் வாழ்வியலையும், பறை இசையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் இந்த திரைப்படத்தை சியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபா – சுரேஷ் ராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் பறை இசை கலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இசைக் கலைஞர் பத்ம ஸ்ரீ வேலு ஆசான், கலைமாமணி முனிசாமி, இயக்குநர் கே. பாக்யராஜ், திண்டுக்கல் ஐ .லியோனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பறை இசையின் முக்கியத்துவத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ‘மாண்புமிகு பறை’ எனும் இந்த படத்தின் முதல் பாகத்தில் பறை இசை கலைஞர்களின் வாழ்வியலையும், இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்ல உள்ளோம்.
மேலும் இந்த தமிழ் மண்ணின் ஆதி இசையான பறை இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதினையும் வென்றிருக்கிறது. இந்த திரைப்படம் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் திகதி முதல் படமாளிகையில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.