100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலைத்திட்டம்) உறுதி சட்டத்தை, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார். திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பார்லி வளாகத்தில் பேரணி நடத்தினர்.
பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது நிருபர்களிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பெயர் மாற்றுவது மூலம் எங்களால் வழங்கப்பட்ட அந்த உரிமையை பாஜ.,வினர் பறிக்கிறார்கள்.
அவர்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள். இது ஒரு பெரிய பிரச்னை, இது ஏழைகளுக்கு மிகவும் கடினமானது. எனவே, நாங்கள் இதற்காக இறுதிவரை போராடுவோம். நாங்கள் வீதிகளில் போராடுவோம், ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போராட்டம் நடைபெறும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.