‘தித்வா’ சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் மலையக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்துவரும் சில வாரங்களில் அவர்களது புனர்வாழ்வுப்பாதை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது பற்றித் தெளிவில்லாமல் இருப்பது, அம்மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் மனவழுத்தத்தையும் தோற்றுவித்திருப்பதாக மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் நிவாரணமும், மீள்கட்டுமானமும், புனர்வாழ்வும் உரிய முறையில் அம்மக்களைச் சென்றடைந்து, அம்மக்கள் பாதுகாப்பான சமூகமாக மீண்டெழுவதற்கு அவசியமான விடயங்களில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என அக்கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மலையக மக்களின் பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவரும் சிவில் செயற்பாட்டாளர்களான கௌதமன் பாலச்சந்திரன், நடேசன் சுரேஷ், அன்டனி ஜேசுதாஸன், அருணாச்சலம் சண்முகவடிவு, செல்வராஜா இராஜசேகர், ஜீவரட்ணம் சுரேஷ், கமலேஸ்வரி இலட்சுமணன், ஜெஹன் ஜெகதீசன், வேலுசாமி வீரசிங்கம், சரண்யா அருண்பிரசாத் மற்றும் அனித்ரா வரயா ஆகியோரடங்கிய மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அடுத்துவரும் சில வாரங்களில் இவர்களது புனர்வாழ்வுப்பாதை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது பற்றித் தெளிவில்லாமல் இருப்பதானது, அம்மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் மனவழுத்தத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.
‘தித்வா’ சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் மலையகத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன என்பது சகலரும் அறிந்த விடயமாகும். குறிப்பாகத் தோட்டப்பகுதிகளில் வாழும் மலையகத் தமிழர் வாழ்வை இக்கோரப் பேரிடர் புரட்டிப்போட்டுள்ளது.
இயற்கையின் சீற்றம் தவிர்க்க இயலாததாக இருப்பினும், அதன் தாக்கமும் துயரமும் அனர்த்தத்துக்கு முன்னரான சமூக, பொருளாதாரக் கட்டமைப்பினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்பது பேரிடர் அனர்த்த ஆய்வுகளின் முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். எனவே இம்முறை ஏற்பட்ட அனர்த்தமும் இப்பிரதேசங்களில் விளிம்பு நிலையில் இருந்த மலையக மக்களை அதிகளவு பாதித்திருப்புது ஆச்சரியமில்லை.
அரசாங்கம் அறிவித்திருக்கும் நிவாரணத்திட்டங்களின் ஆதரவினைப்பெற்று மலையகத் தமிழர் சமூகம் மீண்டெழுவதில் பல்வேறு சிக்கல்களும் சவால்களும் இருக்கின்றன. தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரச நிர்வாகத் தரப்பினருக்கு இருக்கும் அனுபவக் குறைவும், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு இருக்கும் தடங்கல்களும், குறிப்பாக காணி உரிமை தொடர்பில் இருக்கும் தெளிவற்ற தன்மையும் சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடியவையாகும்.
எனவே நிவாரணமும், மீள்கட்டுமானமும், புனர்வாழ்வும் உரிய முறையில் அம்மக்களைச் சென்றடைந்து, அம்மக்கள் பாதுகாப்பான சமூகமாக மீண்டெழுவதற்கு அரசாங்கம் சில முக்கிய விடயங்களில் அவதானம் செலுத்தவேண்டும்.
அதன்படி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு முகாம்கள், பாடசாலைகள், உறவினர் வீடுகள், பகுதியளவு சேதமடைந்த வீடுகள் போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையானோர் தங்கியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் மலையகத் தமிழர்களாவர். அடுத்துவரும் சில வாரங்களில் இவர்களது புனர்வாழ்வுப்பாதை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது பற்றித் தெளிவில்லாமல் இருப்பதானது, அம்மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் மனவழுத்தத்தையும் தோற்றுவித்திருக்கின்றது. எனவே முதலில் தமிழில் தெளிவான உத்தியோகபூர்வ தகவல் தொடர்பாடல் இன்றியமையாததாகும். நிவாரணம், மீள்கட்டுமானம் குறித்த தகவல்கள் தமிழில் பிரசுரிக்கப்படல், வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் தமிழ் பேசும் அமைச்சர் அல்லது பிரதியமைச்சர் கட்டாயம் பங்கேற்று இச்செயன்முறைகள் குறித்து விளக்கமளித்தல், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடக சந்திப்புக்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்படல், பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் பிரிவு மட்டத்தில் நடாத்தப்படும் கலந்துரையாடல்களின்போது அரச கரும மொழிக்கொள்கை பின்பற்றப்படல் என்பன இதன்கீழ் கருத்திற்கொள்ளப்படவேண்டும்.
அடுத்ததாக அடைமழை மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் மலையகத்தின் அநேகமான பாதைகள் சேதமடைந்து போக்குவரத்து நடவடிக்கைகள் சிக்கலடைந்துள்ளன. எனவே இவற்றை சீரமைப்பதற்கும், நிவாரண வழங்கல் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கும் மலையகத்துக்கு மேலதிக ஆளணி ஒதுக்கப்படுவது அவசியமாகும்.
அதேபோன்று பெருந்தோட்டத்துறையின் நிர்வாக முறைகள், தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களின் காணி உரிமையின்மை காரணமாக தமது விவசாய, கால்நடை, கைத்தொழில், வியாபார முயற்சிகளைப் பதிவுசெய்ய இயலாத சட்ட, நிர்வாக சூழலே மலையகத்தில் நிலவுகின்றது. எனவே அரசின் தற்போதைய சுற்றுநிருபங்களின் அடிப்படையில் அம்மக்கள் இழப்பீடு பெறுவதற்கான தகைமையை அடைவது சந்தேகத்துக்குரிய விடயமாகும். அதுமாத்திரமன்றி தோட்ட பிரதேசங்கள் குறித்து அரச தரவு சேகரிப்பதிலும், தேவையை இனங்காண்பதிலும் அதிக இடைவெளிகளும் குறைபாடுகளும் காணப்படுகின்றன. ஆகவே சில அரச நிவாரண வழங்கல் திட்டங்களில் தகைமை மற்றும் அத்தாட்சிப்படுத்தலில் நெகிழ்த்தன்மை பேணப்படவேண்டும்.
அதேவேளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தோட்ட சமூக உட்கட்டமைப்பை செப்பனிடும் மற்றும் மீள்கட்டுமானம் செய்யும் பணியை அரசு பொறுப்பெடுத்து, போதியளவான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதுமாத்திரமன்றி மலையக மக்களின் வீடு, காணி உரிமை தொடர்பாக தெளிவான கொள்கை விளக்கமும், அதனை முன்னிறுத்திய உத்தியோகபூர்வ அங்கீகார செயற்பாடுகளை உறுதிப்படுத்தவேண்டியதும் இன்றியமையாததாகும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.