தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் தி.மு.க.வுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்கிற பிரசாத பயணத்தை நடத்தி வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் கரூர் சம்பவத்தையடுத்து அவரது சுற்றுப்பயணம் சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தமிழகத்தில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின்குறைபாடு களையும் தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.
மதுரையில் நாளை மாலை பா.ஜ.க.வின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கி வருகிற 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அங்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது.
முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் பிரசார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அந்த வகையில் பா.ஜ.க. பிரசார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க இருக்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை புறநகர் மேற்கு கழகத்தில் மதுரை புறநகர் மேற்கு மற்றும் அண்டை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளார்
பா.ஜ.க. பிரசார பயணத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்பதால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.