நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மஸ்கெலியா – மறே தோட்டத் தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (08) மாலை இவர்கள் குறித்த தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மறே தோட்டப் பகுதியில் உள்ள மலையில் அமைந்துள்ள பாரிய கற்பாறையில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பாறை சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் முகாமில் தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று இரவு முதல் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மக்களின் பாதுகாப்பு கருதி இராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியை ஆய்வு செய்ய, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.