பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி அதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மறை மாவட்ட மக்களுக்கு எழுதிய தவக்கால திரு மடலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில்,பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கத்தின் மட்டில் மக்கள் கொண்டிருந்த பல எதிர்பார்ப்புகள் இன்றும் எதிர் பார்ப்புகளாகவே உள்ளன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வலியுறுத்தி வரும் பல பிரச்சினைகளுக்கு இன்றைய அரசாங்கம் தீர்வுகளைத் தராமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு செல்வது மன வருத்தத்திற்குரியது.
கடந்த கால தேர்தல் பரப்புரைகளின் போது தமிழ் மக்களுக்கு குறிப்பாக மன்னார் மக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளும், காத்திருப்பும் தொடர்கதையாகவே உள்ளன.
இந்தநிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தற்போது மீனவ சமூகம் எதிர்நோக்கும் பாரிய தொழில் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் மட்டில் அரசாங்கம் அதிக அக்கறையோடு விரைந்து செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது, மக்களின் உணர்வுகளை புரிந்து, மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.
வேற்றுமைகளை களைந்து, சமாதான வழியில் அரசியல், சமய, சமூக முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றுபட்ட சமாதான வாழ்வுக்கு அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.