இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் Maha Rattana Buddhist Association அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், நேற்று 13ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்.
இதன்போது, 108 புத்தர் சிலைகளை இலங்கைக்கு வழங்கும் புண்ணியக் கருத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் அடையாளமாக அமைச்சரிடம் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால மத மற்றும் இராஜதந்திர உறவுகளை உறுதிப்படுத்துவதே இந்த விசேட திட்டத்தின் நோக்கமாகும். மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீகப் பிணைப்பை வலுப்படுத்துவது இதன் முதன்மை இலக்காகும்.
இந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக, நுவரெலியா மாவட்டத்திலுள்ள வசதிகள் குறைந்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை வழங்கும் பணிகள் அடையாள ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.