யாரும் எதிர்பாரா அளவிலான சேதத்தை எமது தேசத்திலே இந்தப் புயல் ஏஏற்படுத்தியுள்ளது. உறக்கத்திலிருந்தவர்கள் கண் விழிக்காமலேயே உயிரிழந்த சோகம் மிகப் பெரிது. நான் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்த போது அவர்களின் நிலைமை மிக வேதனையளித்தது எனபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய தினம்(05) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கம், பொலிசார், முப்படையினர் என சகல விதமானவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அத்தோடு வெளிநாடுகள், உள்நாடு ஆகியவற்றிலிருந்து எமக்குக் கிடைத்துவரும் நிவாரண உதவிகள் மிகப்பெரிது.
என்ன முரண்பாடுகள் இருந்தாலும் அனர்த்த வேளைகளில் சக மனிதனைக் காப்பாற்ற உதவும் மனித நேயமிக்க மனிதர்கள் எம் நாட்டில் நிறைந்து காணப்படுகின்றார்கள். இன, மொழி பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்பது பெருமை கொள்ளத்தக்க ஒரு விடயமாகும்.
வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகவுள்ள மலையகப் பகுதிகளிலே வசிக்கும் எமது எமது உறவுகள் இருக்கின்றார்கள். மலையகத்தைப் பொறுத்தவரை ஒரு வீட்டிலே இரண்டு மூன்று குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடந்த காலங்களிலே அனர்த்தம் வருகின்றது என அறிவித்தாலும் கூட அங்கே வசிக்கின்ற மக்களுக்கு இடம்பெயர்ந்து வாழ வேறு இடங்கள் கிடையாது.
காலநிலை மாற்றங்களின் போது பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குங்கள் என அறிவிக்கப்படுகின்றது.
நாங்கள் எங்கே தங்குவது? என மக்கள் கேட்கிறார்கள். அனர்த்தங்கள் வரும்போது அவர்களை தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கின்றனர் பின்னர் திரும்பவும் தமது பாதுகாப்பற்ற வாழிடங்களுக்கு அவர்கள் செல்கின்றார்கள். இந்த நிலை மாறி மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை அரசாங்கம் வீடுகள் அல்லது காணிகளை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என மேலும் தெரிவித்த அவர், எமது மக்களுக்கு மிக அத்தியாவசியமானது நிலம். எனவே தோட்டங்களில் இருக்கின்ற பாதுகாப்பான நிலங்களை வழங்கவேண்டியது மிக முக்கியமான விடயமாகும்.
அதே வேளை இந்தப் பேரனர்த்தத்தினால் இறந்து கிடக்கின்ற மக்களின் சடலங்களுக்கு மேலேறி எதிர்க்கட்சி அரசியல் செய்கின்றது. நிலைகுலைந்து போயுள்ள நாட்டை மீடெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கரம் கொடுத்து இணைந்து செல்லாமல் மக்களுக்குக் கிடைக்கின்ற நலன்களை அவர்கள் கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். யாரென்ன நினைத்தாலும் யாரென்ன செய்தாலும் பீனிக்ஸ் பறவை போல எமது நாடு குறுகிய காலத்துக்குள் மீண்டு வரும்.
எங்களின் அமைச்சின் ஊடாக நாம் பல்வேறு பட்ட அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம். அடுத்த வருடத்துக்கான வீட்டுத்திட்டம் முதலான பல்வேறு உட்கட்டமைப்புச் செயற் திட்டங்களை மேற்கொள்வதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றோம் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
By C.G.Prashanthan