விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறையை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கடந்த 24 மற்றும் 26ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் கீழ் உள்ள அரசாங்க நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள், செயலாற்று அறிக்கைகள் குறித்து ஆராயும்போதே குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் விவசாயம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் உள்ள பல நிபுணர்கள் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும், அத்தகைய நபர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் இந்தத் துறையை மேம்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். விவசாயத் துறையில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குழு தலையீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயலாற்று அறிக்கைகள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, பெருந்தோட்டத் துறையில் தேயிலை மற்றும் இறப்பர் பயிர்கள் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தியதுடன், இதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெறமுடியும் என்றும் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயலாற்று அறிக்கைகளும் இங்கு ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, கிட்ணன் செல்வராஜ், சித்ரால் பெர்னாந்து, ஞானமுத்து ஸ்ரீநேசன், கிங்ஸ் நெல்சன் மற்றும் அரச அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.