சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் புலி ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் 12/11/2025 இரவு சுமார் 10:40 மணியளவில் தனது கட்சி அலுவலகம் மற்றும் வீடு அமைத்துள்ள 238 கே. கே. எஸ் வீதி தாவடி எனும் முகவரிக்கு இரண்டு வாகனங்களில் வந்த இனத்தெரியாத நபர்கள் தமது அலுவலகம் மற்றும் வீட்டைக் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்ததுடன் வீட்டு வாசலில் நின்ற தனது மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களை ஆபாசமாத் தூற்றியதுடன் நீங்கள் தேசத் துரோகிகள், குடும்பமாக கொல்லப்படுவீர்கள் என மிரட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி துணுக்காயில் புலிகளால் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் இருந்த இடத்துக்குச் சென்று அங்கு வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஊடகங்களில் பேசி இருந்தனர். புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம் குறித்துப் பேசிய பின்னரே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். துணுக்காயில் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைப் மாற்று இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டிப் புலிகள் சித்திரவதைக்குட்படுத்திப் படுகொலை செய்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதும் அது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததுமே தம் மீதான மரண அச்சுறுத்தல்களுக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.
இந்த NPP அரசாங்கம் தமது தேர்தல் வெற்றிக்காக புலிகளையும் அவர்களது எச்ச சொச்சங்களையும் ஆதரிப்பதால் புலிகள் மீண்டும் தமது ஜனநாயக விரோத கொலைக் கலாசாரத்தை கையிலெடுக்க முயற்சிப்பதாக அவர் அரசாங்கத்தைக் குற்றஞ் சாட்டினார்.
By C.G.Prashanthan