முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 85 மில்லியன் ரூபாய் நிதியில் மூன்று அணைக்கட்டுக்களின் புனரமைப்பு பணிகள் முடிவுறாத நிலையில் உள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சித்தாறு அணைக்கட்டு தற்போது ஆரம்பக்கட்டப் பணிகளில் உள்ளது. சிவசாமி அணைக்கட்டில் கதவு பொருத்தும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில் காணப்படுகிறது. வீரசிங்கம் அணைக்கட்டின் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், மூன்று அணைக்கட்டுகளும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் விவசாயிகள் விரைவில் பணிகளை முடிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்ட பணிப்பாளர், உலக வங்கியின் இலங்கை பிரதிநிதி, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று அணைக்கட்டுகளுக்குச் சென்று அவற்றின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் நிறைவு செய்யப்படும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்திருந்த போதிலும், கடந்த இரண்டு மாதங்களாக வேலையில் இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு காரணங்களை கூறி வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்திப்பின் போது ஒப்பந்தக்காரர்கள் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி முதல் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதாக உறுதியளித்தனர். மேலும், நவம்பர் 15ஆம் திகதிக்குள் பணிகளை ஆரம்பிக்க தவறின், அவர்களின் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் புனரமைப்பு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.