இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது.
இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை, நேற்று முன்தினம்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் விதமாக உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, புதிய பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல்களில் தாம் பங்கேற்றதாகவும், தம்மால் முன்மொழியப்பட்ட சில திருத்தங்கள் பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் கரிசனைக்குரிய சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இணையனுசரணை நாடுகளுடன் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
அதேவேளை இலங்கை தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறை குறித்துப் பிரஸ்தாபித்த அவர், அதற்கான ஆணை பேரவைக்கு இல்லை எனக் குறிப்பிட்டதுடன் அண்மையில் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் வெளியகப் பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அறிவித்தமையை மீண்டும் நினைவுறுத்தினார்.
அதேபோன்று இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் நம்பகத்தன்மை, அச்செயற்திட்டம் இயங்கும் விதம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு என்பன தொடர்பில் தாம் நீண்டகாலமாகக் கேள்வி எழுப்பிவருவதாகத் தெரிவித்த ஹிமாலி அருணதிலக, அச்செயற்திட்டத்தின் மூலம் இலங்கை மக்கள் எவ்வகையிலும் நன்மை அடையவில்லை என்றும், மாறாக அத்திட்டம் இலங்கையர்களை இன ரீதியில் பிளவுபடுத்தவும், துருவமயப்படுத்தவும் வழிகோலும் என்றும் கூறினார்.
மேலும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மிகக்குறுகிய காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஆகவே இப்புதிய பிரேரணையை தாம் முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்தார்.