இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவையை எப்போது மீள ஆரம்பிப்பது என்று குறிப்பிட முடியாது. அந்தளவுக்கு புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளன என்று புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.
நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள், பாலங்கள் தற்போது புனரமைக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களினால் சகல பிரதேசங்களுக்குமான புகையிரத பாதைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.
புகையிரத சேவைகள் தற்போது வரையறுக்கப்பட்ட வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. றம்புக்கனை, பொல்காஹெவல ஆகிய பகுதிகளின் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கான அலுவலக புகையிரத சேவைகள் புதன்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவை எப்போது மீள ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட முடியாது. மலையகத்துக்கான புகையிரத பாதைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக மாத்தளை – கண்டி புகையிரத பாதைகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.
மலையக புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடுவதற்கு இன்று 2 மாதங்களேனும் செல்லும். மணிசரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒருசில பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.
இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு (பாலம், வீதிகள், சமிஞ்சை கட்டமைப்பு, புகையிரத நிலையங்கள்) 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. புகையிரத சேவையை இயலுமான வகையில் வழமைக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.