ஹட்டன் – நோர்டன் பிரதான வீதிப் பாலத்தை புனரமைக்கும் பணியில் இராணுவம்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காசல்ரீ பகுதியில் உள்ள ஹட்டன் – நோர்டன் வீதிப் பாலம் கடும் சேதத்திற்கு உள்ளானது.
பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அங்கு புதிய பாலம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்காலிக இரும்புப் பாலம் ஒன்றைப் பொருத்துவதற்கான கட்டுமானப் பணிகள் இன்று (10) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை கண்டியில் அமைந்துள்ள பல்லேகெலே 31வது இராணுவ பொறியியல் படைப்பிரிவினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கு காசல்ரீயைச் சுற்றியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பும் பெறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி குறித்த பாலம் சேதமடைந்ததிலிருந்து, அவ்வீதியூடான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு, மாற்று வழிகள் ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பாலத்தின் கட்டுமானப் பணிகளை தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி, ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.