மத்திய வியட்நாமில் 40க்கு மேற்பட்டோரின் உயிர்களை காவு வாங்கிய மழை, வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால், லாம் டோங் (Lam Dong) மாகாணத்தில் ஓடும் டா நிம் ஆற்றின் (Da Nhim River) மீது பல தசாப்தங்களாக உறுதியாக நின்ற தொங்கு பாலம் உடைந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சி வைரலாகியிருக்கிறது.
அந்நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், டா நிம் ஆற்றின் நீர்மட்டம் வெள்ளம் காரணமாக உயர்ந்திருப்பதோடு, அடித்துச் செல்லும் அந்த வெள்ளத்தில் வியாழக்கிழமை (20) ஆற்றின் மேலே பல ஆண்டுகாலமாக உள்ளூர் பிரதேசவாசிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த தொங்குபாலம் உடைந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.