கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கியதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்தப் உத்தரவை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனிடம் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்:
“கிளிநொச்சி பொலிஸார் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை அறிந்து, எனது சட்டத்தரணி ஊடாக அந்த வழக்கு தொடர்பான முன்நகர்த்தல் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பொலிஸார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்குமாறு எனக்கு உத்தரவு விடுத்தது. நான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னரே பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.