முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெல்தோட்டைக்கு கள விஜயம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், வியாழக்கிழமை (4), மோசமான காலநிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த தெல்தோட்டைப் பிரதேசத்தில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமையை நேரில் கண்டறிந்தார்.
அவருடன் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை முன்னாள் பிரதித் தவிசாளர் உவைஸ், கண்டி மாநகர சபை உறுப்பினர் அனீஸ்தீன், ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை உறுப்பினர் நியாஸ் கான், அத்துடன் தெல்தோட்டை மற்றும் கலஹா ஆர்வலர்களான கன்சுல், நாமீர், அஸீஸ், அசோக், அஸ்மத் ஆகியோரும் இணைந்திருந்தனர். அவர் பிரதேச செயலக அலுவலகத்திற்கு விஜயம் செய்ததோடு, பாதிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டார்.
அனர்த்தத்தால் இடம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டுள்ள மலைமகள் இந்து மத்திய கல்லூரி, தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, கோனகொட தக்கியா, ஹைத் கிறிஸ்தவ ஆர்த்தடொக்ஸ் தேவாலயம் ( Haith Christian Orthodox Church), பியசேனபுர தக்கியா, கலஹா இந்து கோவில் உள்ளிட்ட முகாம்களையும் அவர் பார்வையிட்டு, இடம்பெயர்ந்த குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தார். மண் சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. நாரன்ஹேன, பட்டியகம தோட்டம், பியசேனபுர, அநுர டெனியல் வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதி, தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானம், கோனகொட தக்கியா பகுதி, முஸ்லிம் கொலனி, மற்றும் கலஹா மேல் பிரிவு ஆகிய இடங்களில் பாரிய மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நில்லம்பே மற்றும் கலஹா சந்திக்கு அப்பால் உள்ள பாதை நீரில் மூழ்கியதால், வாகனப் போக்குவரத்துக்கான பாதை மிகவும் குறுகியுள்ளது. பல வீதிகளில் பாரிய வெடிப்புகள் காணப்படுவதால், கனரக வாகனங்கள் பயணிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் ஆழமான பள்ளத்தாக்குகள் உருவானதால், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) அவற்றை கொன்கிரீட் தடுப்புகள் மூலம் வலுப்படுத்த பல மாதங்கள் ஆகலாம்.
பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. வீதிகள் சீர்கெட்டுள்ளதால் வழமையான பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க பல வாரங்கள் ஆகலாம். இதனால் கண்டி மற்றும் அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்று இடம் வழங்குதல் மற்றும் வீதி செப்பனிடும் பணிகள் குறித்துத் துரித நடவடிக்கை எடுக்க, உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவது அவசியம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.