அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவற்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். அனர்த்த முகாமைத்துவத்துக்காக வேண்டியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள போதிலும், அது குறித்த எந்தவொரு சுற்று நிரூபமும் வெளியிடப்படவில்லை. எனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்காகவும் எதிர்காலத்தில் எமது ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என நாம் உறுதியளிக்கின்றோம். மக்களைப் போன்றே பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தினருக்கும் திறைசேரியூடாக வட்டியற்ற கடன் வழங்கப்பட வேண்டும்.
பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். அளர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது அனர்த்தத்துக்கு பிந்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த அரசாங்கம் தவறியுள்ளது.
வெள்ளம் வழிந்தோடிய பிரதேசங்களில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் கூட முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் பிரதி அமைச்சரொருவர் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறுகின்றார். அந்த பிரதி அமைச்சர் இன்னும் தன்னை எதிர்க்கட்சி எம்.பி. என நினைத்துக் கொண்டிருக்கின்றார். அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
உட்கட்டமைப்பு சேதங்கள் மாத்திரம் 900 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை என்றே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 1000 மில்லியன் ரூபா நிதி சேகரிப்பிற்கான திட்டமிடல்களை இதற்கு முன்னரே நாம் சமரப்பித்திருக்கின்றோம். இப்போதாவது அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
By C.G.Prashanthan