அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல் மற்றும் தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி சார் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான (இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர) 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்விச் செயற்பாடுகளைப் மேற்கொள்வது தொடர்பாக சுற்று நிரூபத்தில், குறிப்பிடப்பட்டுள்ளவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் ஆரம்பமாகவுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தூய்மைப்படுத்தல் செயற்பாடுகளை உரிய தரப்பினருடன் ஒருங்கிணைப்புச் செய்து 15ஆம் திகதிக்கு முன்னர் முறையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் போது ஆபத்தான மரங்கள் அல்லது மரக் கிளைகள், கட்டிடங்கள், மதில்கள் மற்றும் கூரைகள் போன்றவை குறித்து ஆராய்ந்து அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும்.
15ஆம் திகதி கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் அனைவரும் கடமைகளுக்காக சமூகமளிக்க வேண்டும். அத்துடன் 16ஆம் திகதியன்று பாடசாலை ஆரம்பிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 16ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படாத பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா பணிக்குழுவினர் 15ஆம் திகதி தமது வதிவிடத்தை அண்மித்து அமைந்துள்ள கோட்டஃ வலயக் கல்வி அலுவலகங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.
அன்றைய தினம் அவர்களது வரவு மற்றும் வெளியேறுகையை பதிவு செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். உரிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அவ் உத்தியோகத்தர்களை தேவைகளுக்கமைய பொருத்தமான பாடசாலைகளுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்ய வேண்டும்.
பாடசாலை தவணைகள் – சிங்கள, தமிழ்ப் பாடசாலைகள்
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறும். 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறும்.
முஸ்லிம் பாடசாலைகள்
முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 16ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 2ஆம் திகதி வரை இடம்பெறும். டிசம்பர் 27 சனிக்கிழமையும் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மூன்றாம் தவணையில் கற்றல் நடவடிக்கைகள்
பாடத்திட்டம் நிறைவு செய்யப்படாத பாடசாலைகளில் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாடத்திட்டம் நிறைவு செய்யப்பட்டிருப்பின் அத்தகைய பாடசாலைகளில் மீட்டல் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
அதே போன்று, தேசிய அனர்த்தம் ஒன்றின் போது செயற்பட வேண்டிய விதம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணச் சேவைகள் குறித்து அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களின் சமூக மனவெழுச்சித் திறன்களை மேம்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியும்.
தவணைப் பரீட்சைகள்
மாணவர்களை மீண்டும் பாடசாலைச் சூழலுக்கு பழக்கப்படுத்தி, அவர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டியுள்ளதால், பாடசாலை ஆரம்பித்தவுடன் 2025 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் மற்றும் போட்டிகளில் மாணவர்களை கலந்துகொள்ளச் செய்வது பொருந்தமற்றது. தவணைப் பரீட்சைப் புள்ளிகளைக் கருத்தில் கொள்ளாமல் மாணவர்கள் அடுத்த வகுப்புக்குத் தரமுயர்த்தப்பட வேண்டும்.
தரம் 11 மாணவர்களுக்கு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பயிற்சியாக அமைவதால், அந்த மாணவர்களுக்குப் பொருத்தமானவாறு 2026 ஜனவரி மாதத்தில் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது. தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைப் பரீட்சை நடத்தப்படலாகாது என்பதுடன் அவர்களது அடைவு மட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக வகுப்பு மட்டத்தில் மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
2026ஆம் ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள்
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் :
முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.01.05 முதல் 2026.01.09 வரை இடம்பெறும். 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை முன்னிட்டு 2026.01.10 ஆம் திகதி முதல் 2026.01.20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். இரண்டாம் கட்டமானது 2026.01.21 முதல் 2026.02.13 வரை இடம்பெறும். இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்காக 2026.02.14ஆம் திகதி முதல் 2026.03.02ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். மூன்றாம் கட்டம் 2026.03.03 முதல் 2026.04.10 வரை இடம்பெறும். 2026.04.11ஆம் திகதி முதல் 2026.04.19ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.
முஸ்லிம் பாடசாலைகள்
முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.01.05 முதல் 2026.01.09 வரை இடம்பெறும். உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு 2026.01.10 ஆம் திகதி முதல் 2026.01.20 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும். இரண்டாம் கட்டம் 2026.01.21 முதல் 2026.02.13 வெள்ளி வரை இடம்பெறும். சாதாரண தர பரீட்சை மற்றும் ரமழான் நோன்பினை முன்னிட்டு 2026.02.14 ஆம் திகதி முதல் 2026.03.22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். மூன்றாம் கட்டம் 2026.03.23 முதல் 2026.04.10 வரை இடம்பெறும். 2026.04.11 ஆம் திகதி முதல் 2026.04.19ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும். நான்காம் கட்டம் 2026.04.20 முதல் 2026.04.30 வரை இடம்பெறும். 2026.05.01ஆம் திகதி முதல் 2026.05.03 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
2026ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று வகுப்புக்கள் 2026.01.22ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். இந்த அறிவுறுத்தல்களுக்கமைய 2026ம் ஆண்டுக்குரிய கால அட்டவணையைத் தயாரித்து, அதற்கமைய 2026 ஜனவரி 5ஆம் திகதி முதல் செயற்பட வேண்டும். 2026ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தில், அதாவது 2026.01.05ஆம் திகதி முதல் 2026.01.09ஆம் திகதி வரையில் தரம் 6 மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு புதிய கல்வி மறுசீரமைப்புக்களை அறிமுகம் செய்வதற்கும் திசைமுகப்படுத்துவதற்கும் உரிய வேலைத்திட்டங்களை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் 2026.01.21ஆம் திகதி முதல் புதிய கல்வி மறுசீரமைப்புக்களுக்குரியதாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். இவ் விடயம் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் எதிர்வரும் காலத்தில் வழங்கப்படும். அனர்த்தங்களால் இடை நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்டம் 2026.01.12 முதல் 2026.01.20 செவ்வாய்க்கிழமை வரை நடத்தப்படவுள்ளது.
தற்காலிகமாக மாணவர்களை இணைத்தல்
போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்குகின்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு, தமது வசிப்பிடத்திற்கு மிக அருகிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாக கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தற்காலிகமாக இணைப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பாடசாலைகளுக்கு இணைக்கப்படும் மாணவர்களின் தகவல்களைக் கொண்ட பதிவேடு வலயக் கல்வி அலுவலகத்தில் கோவைப்படுத்தப்பட்டு பேணப்பட வேண்டும்.
தற்காலிகமாக பாடசாலைக்கு இணைப்புச் செய்யப்படும் மாணவர்களது வரவினை தற்காலிக வரவு இடாப்பு ஒன்றில் பதிவு செய்ய வேண்டும். தற்காலிகமாக அனுமதிக்கப்படும் மாணவர்களிடமிருந்து எந்தவொரு கட்டணமும் அறவிடப்படலாகாது.
பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பான தகவல்கள் பேணப்பட வேண்டும். அத்துடன், குறித்த மாணவர்களின் உளவியல் நலன்களை மேம்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும்
விசேட கல்வித் தேவைகளுடன் கூடிய மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் தடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட உயர் தர மற்றும் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தேவைகளை இனங்கண்டு, அவர்களுக்குத் தேவையான பாடக் குறிப்புகள் உட்பட கற்றல் உபகரணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உளநலத்தைப் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும்.
அணர்த்த நிலைமை காரணமாக போக்குவரத்துச் சிரமங்கள் நிலவும், தூரப் பிரதோங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, விடுதிகள் உள்ள பாடசாலைகளில் வசதிக்கு ஏற்றவாறு தற்காலிகமாக விடுதி வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
அனர்த்த நிலைமை மற்றும் ஏனைய நியாயமான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் ஆரம்ப காலத்தில் மாணவர்களுக்குப் பாடசாலைச் சீருடை கட்டாயமில்லை. மாணவர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்படல் வேண்டும்.
அனர்த்த நிலைமை காரணமாக போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்களின் பாடசாலைக்குச் சமூகமளிக்கும் மற்றும் வெளியேறும் நேரங்கள் தொடர்பாக அதிபர்கள் உரிய வலயக் கல்விப் பணிப்பாளர்களை அறியப்படுத்தி, பொருத்தமானவாறு சலுகை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அனர்த்த நிவாரண செயற்பாடுகள்
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் எந்தவொரு விதத்திலும் பணம் அறவிடப்படலாகாது. அத்துடன் சிரமதான சேவை பெறப்படுமானால், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை மாத்திரம் பெற்றோர் அனுமதியுடனும் ஆசிரியர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழும் அதில் ஈடுபடுத்த வேண்டும். சிரமதான சேவைக்காக மாணவர்கள் தூரப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டால், இந்த அமைச்சின் சுற்றுநிருப இலக்கம் 51ஃ2023 இன் அறிவுறுத்தல்களின்படி வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதி பெறப்பட வேண்டும்.
பாடசாலை போக்குவரத்து வேலைத்திட்டம்
பாடசாலைப் போக்குவரத்து வேலைத்திட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்து வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும்.
போக்குவரத்து வேலைத்திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலக்கம் 14ஃ2025 மற்றும் 2025.04.01 ஆந் திகதியுடைய சுற்றுநிருபத்தின் படி, ஒரு உணவு வழங்குனர் மூலம் உணவு வழங்குவது அதிகபட்சம் 200 மாணவர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வழங்குனர்கள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமானால், 2025 ஆம் ஆண்டில் பாடசாலைகள் நடைபெறும் அடுத்த சில நாட்களுக்கு மாத்திரம் அந்த வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் செயற்பட வேண்டும்.