டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதற்கு பாகிஸ்தான் இணக்கம் வெனியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் அனைவரும் நேசிக்கும் இந்த விளையாட்டு தொடர்வதை உறுதி செய்தமைக்காக பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப்புக்கு நன்றி.
கொழும்பில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற ரீதியில், இலங்கை @ICC மற்றும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
1996 உலகக் கிண்ணத்தின் போது, பாதுகாப்பு காரணங்களால் மற்றவர்கள் இலங்கைக்கு வரத் தயங்கிய வேளையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கொழும்பில் விளையாடி வெளிப்படுத்திய அந்த ஒற்றுமையை இலங்கை இன்னும் மறக்கவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.