இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த மாதம் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கூட்டாக நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி லாகூருக்கு விஜயம் செய்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இன்று காலை லாகூர் சென்றடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக உபகண்ட ஆடுகளங்களுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை அவுஸ்திரேலியா எதிர்த்தாடவுள்ளது.
பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் விஜயம் செய்வது இது மூன்றாவது தடவையாகும்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் 2022இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் ஒற்றை ரி20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தானை அவுஸ்திரேலியா எதிர்த்தாடி இருந்தது.
அதன் பின்னர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் அவுஸ்திரேலியா விளையாடி இருந்தது.
அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெறும்.
அப் போட்டிகள் ஜனவரி 29, 31, பெப்ரவரி 1ஆம் திகதிகளில் நடைபெறும்.
உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது சவால் மிக்கது என லாகூரில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் தெரிவித்தார்.
‘பாகிஸ்தான் அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். அதனால் நாங்கள் சவாலை எதிர்கொள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக ஷஹீன் (ஷா அப்றிடி) ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். எங்கள் அணிக்கு அவர் சவாலாக விளங்குவார்’ என மிச்செல் மார்ஷ் தெரிவித்தார்.
‘இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் எங்களை உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்திக்கொள்வதற்கு முக்கியமாகும். இந்த சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் சில வீரர்கள் பாகிஸ்தானை இலங்கையில் சந்திப்பார்கள்.
‘உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள சில வீரர்கள் இங்கு வருகை தரவில்லை. அவர்கள் சொந்த நாட்டில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள். அதனால் எங்களுக்கு மன அழுத்தம் இல்லை’ என்றார்.
பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், க்ளென் மெக்ஸ்வெல், டிம் டேவிட், நேதன் எலிஸ் ஆகிய ஐந்து சிரேஷ்ட அவுஸ்திரேலிய வீரரக்ள் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தில் இடம்பெறவில்லை.
இதேவேளை, கிரிக்கெட்டில் பெரிய அணி, சிறிய அணி என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்று பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா தெரிவித்தார்.
‘சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது எந்த அணியும் இலகுவாக அமையப்போவதில்லை. எங்களை எதிர்த்தாடும அணி தரிவரிசையில் முதலாவதாக இருந்தாலும் எங்களைவிட பின்னிலையில் இருந்தாலும் நாங்கள் எங்களை எவ்வாறு முன்னேற்றிக்கொள்வது, எங்களது திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவோம்’ என அவர் கூறினார்.