பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் புதன்கிழமை (21) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பெல்ஜியத்தின் இலங்கைக்கான ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ் (Mr. Koenraad Pringiers) விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத நட்புறவுச் சங்கத்தின் சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான பத்மசிறி பண்டார மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் இணைப் பொருளாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது, இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், பாராளுமன்ற ஈடுபாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை வலியுறுத்தி, பொதுவான நலன் சார்ந்த பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இக்கூட்டத்திற்கு முன்னர், பெல்ஜியத்தின் ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன், இதன்போது இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.